Saturday, May 07, 2005

இது தாண்டா புள்ள !

நான்கு தலைமுறைகளாக தினக்கூலிகளாக இருந்தவர்களின் வம்சாவழியில் வந்த 23 வய்து நிரம்பிய சகாயராஜ் இன்று Aztec Software Technology services என்ற நிறுவனத்தில் பணி புரிந்து, வருடத்திற்கு இரண்டரை லட்ச ரூபாய் சம்பாதிக்கிறார் என்ற தகவல், அவர் தாயும் தந்தையும் சேர்ந்துழைத்து நாளொன்றுக்கு ரூ.100 சம்பாதிக்கின்றனர் என்பதுடன் ஒப்பிட்டு நோக்கும்போது பலரை மிகுந்த ஆச்சரியத்துக்கு உள்ளாக்கும்!

இந்த இளைஞரின் வெற்றிக்கதை வில்லுபுரத்தில் உள்ள பெரியநாயகி நகர் என்ற கிராமத்தில் தொடங்கியது! இவர் சிறுவயதில் பள்ளி (St.Michaels) செல்ல தினமும் 6 கி.மீ நடக்க வேண்டியிருந்தது. SSLC தேர்வில் பள்ளியில் முதலாவதாக வந்தது தான் இவர் வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது. குடும்பச்சூழல் கருதி இவரது தந்தை இவரையும் வயற்காட்டு வேலைக்கு வருமாறு பணித்தபோது சகாயராஜ் திட்டவட்டமாக மறுத்து, தன் ஆசிரியரின் அறிவுரைப்படி, கணினிவியல் டிப்ளமா படிப்பில் சேர்ந்தார். அடுத்த 3 ஆண்டுகள் மிகுந்த கஷ்டங்களுடன் கழிந்தன. தன்னுடைய பாதிரியாரிடமிருந்து வாங்கிய கடன், சர்ச் வழங்கிய நன்கொடை மற்றும் அரசாங்க உதவித் தொகை ஆகியவற்றைக் கொண்டு படிப்பு இதர செலவுகளை சமாளித்து சிறப்பாகவே படித்தார். விடுமுறைகளில் தனது உறவினர்களோடு சேர்ந்து கட்டட வேலையும் செய்து பணம் ஈட்ட வேண்டியிருந்தது!

முதலில் ஏலகிரியில் ஒரு சிறிய கம்பெனியில் பணி செய்தவர் நௌக்ரி.காம் தளத்தில் பதிவு செய்து அதன் வாயிலாக AZTEC நிறுவனத்தால் (எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வுகளை சிறப்பாக எதிர்கொண்டு) தேர்ந்தெடுக்கப்பட்டார். தன்னை மேம்படுத்திக் கொள்ள வேண்டி, ஓய்வு நேரங்களில், Perl, Ruby, C++ ஆகிய கணினி மொழிகளை கற்றுக் கொண்டிருக்கிறார்! அவரது எதிர்காலத் திட்டங்களைப் பற்றி கேட்டபோது, அடுத்த 3 வருடங்களில் MCA படிப்பை முடிப்பதும், தம்பிகளில் கல்விக்கு பணம் அனுப்புவதும், அவரது தந்தை அண்மையில் கட்டிய எளிய தகட்டுக்கூரை வேய்ந்த வீட்டிற்கு வாங்கிய கடனை அடைப்பதும் ஆகியவையே தனது தற்போதைய இலக்குகள் என்று ஆரவாரமில்லாமல் கூறும் இந்த இளைஞர் தலித் மாணவர்களுக்கு (ஏன், எல்லா மாணவர்களுக்குமே!) ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார் என்றால் அது மிகையாகாது!!!!

என்றென்றும் அன்புடன்
பாலா

2 மறுமொழிகள்:

jeevagv said...

நல்ல செய்தி பாலா. இது ஒரு எடுத்துக்காட்டு மட்டுமல்ல ஊக்கமாகவும் இருக்கும் என நம்புகிறேன்.

said...

நாணு சார்,

தங்கள் பாராட்டுக்கு நன்றி. சுஜாதா அவர்களின் பரமவிசிறி நான். அந்த சகாப்தம் எங்கே ? தமிழார்வத்தில் வலைப்பதிவு ஆரம்பித்து ஏதோ எழுதிக் கொண்டிருக்கும் நான் எங்கே ?

இன்னும் படித்து, சிரத்தையுடன் நன்றாக எழுத வேண்டும் என்ற உந்துதலுக்குக் காரணம் தங்களைப் போன்றவர்கள் தரும் ஊக்கமே. என் பதிவுகளை படிப்பதற்கும், பின்னூட்டம் இடுவதற்கும் என் நன்றி!

என்றென்றும் அன்புடன்
பாலா

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails